வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலக யானைகள் தினம்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் தினம் ெகாண்டாடப்பட்டது. சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், கரடி, புலி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளுக்கு விருப்ப உணவு நேற்று அளிக்கப்பட்டது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் கூறுகையில், வாழும் இனங்களில் யானைகள் முக்கியமானவையாகும். ஏனெனில், இவை சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை “சுற்றுச்சூழல் பொறியாளர்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன. யானைகள் பல வழிகளில் தங்கள் வாழ்விடத்தை வடிவமைத்துக்கொள்கின்றன. பாதைகளை உருவாக்குதல், மரக்கிளைகளை கத்தரித்தல், விதைகளை பரப்புதல், வறண்ட காலங்களில் ஆற்றுப்படுகைகளை தோண்டி நீர்ப்பாசன துளைகளை உருவாக்கி மற்றவர்களுக்கு உதவுகின்றன.

இந்த, அழிந்துவரும் உயிரினங்களைப்பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே பரப்புவதற்காக உலகம் முழுவதும் ஆகஸ்ட் 12ம் தேதியை உலக யானைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். உலக யானைகள் தினத்தை நினைவு கூறும் வகையில், அண்ணா உயிரியல் பூங்காவில், யானைகளின் விருப்ப உணவுகளை அளித்து யானைகள் தினத்தை கொண்டாடினோம். இப்பூங்காவில் ரோகிணி மற்றும் பிரக்ருதி ஆகிய இரண்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சகோதரிகள் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கினங்களில் பார்வையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் விலங்கினமாகும். இச்சிறப்பு விழாவில் யானைகளுக்கு பலாப்பழம், தர்பூசணி, கரும்பு, வெல்லம், தென்னங்கீற்றுகள் மற்றும் மூங்கில் இலைகள், புற்கள் ஆகியவை தீவனத்துடன் வழங்கப்பட்டன. பூங்கா அளித்த விருந்தை யானைகள் விரும்பி உண்டு மகிழ்ந்தனர். உயர்நிலை வனஉயிரின பாதுகாப்பு நிறுவனம் (ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி) அறிஞர் உயிரியல் பூங்காவுடன் இணைந்து யானைகள் பற்றிய இணையவழி பேச்சரங்கை நடத்தியது என இவ்வாறு அந்த பூங்கா நிர்வாகம் தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

Related Stories: