மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீடு, கடைகளுக்கு இலவசமாக தேசிய கொடி

மாமல்லபுரம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீடு, கடைகளுக்கு இலவசமாக தேசியக் கொடி வழங்கப்பட்டது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13, 14, 15ம் தேதிகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட நாடு முழுவதும் அனைவரும் தயாராகி வருகின்றனர். மேலும், ஒன்றிய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதேப்போன்று, தமிழக அரசும் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய அரசு 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டுமென அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியது. இதை, செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், நாளை முதல் வரும் 15ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து வீடு மற்றும் கடைகளுக்கு இலவசமாக தேசிய  கொடியை வழங்கி 75வது சுதந்திர தின அமுத பெரு விழாவை சிறப்பிக்கவும், அனைத்து மக்களுக்கும் தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில், தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலையில், பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கடைகளுக்கு இலவசமாக தேசியக் கொடியை வழங்கி 13, 14, 15 ஆகிய தேதி தங்களது வீடு, கடைகளில் ஏற்ற வேண்டுமென வலியுறுத்தினர். அப்போது, கவுன்சிலர்கள் மோகன் குமார், கெஜலட்சுமி கண்ணதாசன், லதாகுப்புசாமி, வள்ளி ராமச்சந்திரன், பூபதி, சரிதா கோவிந்தராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி சண்முகானந்தன், திமுக நிர்வாகிகள் ராமச்சந்திரன், கண்ணதாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: