போதைப்பொருள் கடத்தல் செய்பவர்கள் இந்த சமுதாயத்தையே கெடுக்கும் குற்றவாளிகள்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசு தயக்கம் காட்டாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி..!!

சென்னை: போதைப்பொருள் கடத்தலை செய்பவர்கள் இந்த சமுதாயத்தையே கெடுக்கும் குற்றவாளிகள்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசு தயக்கம் காட்டாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க 2 வழிகள்:

போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க 2 வழிகள் உள்ளன. போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது; அதனை விற்பவர்களை கைது செய்வது ஒரு வழி. போதைப்பொருளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துவது 2வது வழி. முதல் வழி சட்டத்தின் வழி அதனை அரசும், காவல்துறையும் கவனிக்கும், 2வது வழி விழிப்புணர்வு வழி. பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். எனது காவல் எல்லையில் போதைப்பொருள் விற்பனையை தடுத்துவிட்டேன் என்று ஒவ்வொரு ஆய்வாளரும் உறுதி எடுக்க வேண்டும். கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாக தடுத்து நிறுத்தியாக வேண்டும். போதைப்பொருளை ஒழிக்க மலையடிவாரங்களை கண்காணிக்க வேண்டும்.

கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்:

போதைப்பொருளை ஒழிக்க கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போதைப்பொருள் அதிகம் விற்பனையாகும் இடங்களில் நிரந்தரமாக கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக்க அரசு முடிவு:

போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் அரசு திருத்தம் மேற்கொள்ள உள்ளது. போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. போதை மருந்து விற்போரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. சர்வாதிகாரியாக செயல்பட்டு குற்றம் நடக்காமல் தடுப்பேன். திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளன; குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள். குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை பெற்று தருகிறோம், தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.

போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோனால் கடும் நடவடிக்கை:

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு எந்த தயக்கமும் காட்டாது. போதைப்பொருள் கடத்தல் குற்றத்தை செய்பவர்கள், இந்த சமுதாயத்தையே கெடுக்கும் குற்றவாளிகள். சமூகத்தில் தீராத பெரும் நோயை பரப்பக்கூடியவர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு எந்தவித தயக்கமும் காட்டாது.

போதைப்பொருள் கடத்தல் சங்கிலியை உடைக்க வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல் சங்கிலியை உடைத்தாக வேண்டும். எப்படியாவது உடைக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துவோர் அதில் இருந்து மீள முடியாத அளவுக்கு சென்றுவிடுகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்துவோரை திருத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.

Related Stories: