உடலில் சூடு வைத்த கொடூரம் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாமக்கல் மாவட்ட கலெக்டரின் விண்ணைத்தொடு திட்டத்தின் செயல்பாடு குறித்து, குமாரபாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு, கடந்த வாரம் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் சௌடேஸ்வரி சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதில் கிடைத்த விவரம் வருமாறு; குமாரபாளையம் முருங்கைகாடு பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகளுடன் தனியாக வசித்துள்ளார். அப்போது விசைத்தறி தொழிலாளி பிரகாஷ் (40) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். அப்பெண்ணின் 15 வயது மகள், அங்குள்ள அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்துள்ளார். அவருக்கு திருமணம் செய்யும் எண்ணத்தில், மகளை மேற்கொண்டு பள்ளிக்கு அனுப்பவில்லை. தாய் வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியை மிரட்டி பலமுறை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு ஒத்துழைக்க மறுத்தபோது, சிறுமியை அடித்து உதைத்தும், உடலில் பல இடங்களில் சூடு வைத்தும், பட்டினி போட்டும் துன்புறுத்தியுள்ளார். இதை தாயிடம் சொன்னால், இருவரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். புகாரின்படி திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார் பிரகாசை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.

Related Stories: