விதிகளின்படியே தண்ணீர் திறக்கப்படுகிறது முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், விதிகளின்படியே தண்ணீர் திறக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடந்த 5ம் தேதி தாங்கள் எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த உங்களின் கவலைகளை குறிப்பிட்டிருந்தீர்கள். முல்லைப் பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பானது. அணையில் இருந்து விதிமுறைகளின்படியே தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், வெள்ள ஒழுங்குமுறை நெறிமுறையின்படி, அதிகபட்சமாக வைகை படுகையில் தண்ணீரை திருப்பிவிடவும், விதி நிலைகள் மற்றும் கேட் செயல்பாட்டு அட்டவணையை கவனமாக பின்பற்றவும் கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4.8.2022 அன்று இரவு 7 மணி நிலவரப்படி நீர்மட்டம் 136 அடியாக இருந்தது. எங்கள் கள அலுவலர்கள், 5.8.2022 அன்று ஸ்பில்வே கேட் திறக்கும் சாத்தியம் குறித்து, 4ம் தேதி இரவு 7.40 மணிக்கு கேரளாவில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். மேலும் இந்த தகவல் இடுக்கி மாவட்ட ஆட்சியர் மற்றும் கேரளாவில் உள்ள மற்ற அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து ஸ்பில்வே ஷட்டர்கள் 5.8.2022 அன்று மதியம் 1 மணிக்கு திறக்கப்பட்டது. மேலும் 8.8.2022 காலை 7 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 138.85 அடியாகவும், சராசரி நீர்வரத்து 6942 கன அடியாகவும், கசிவுநீர் வெளியேற்றம் சுமார் 5000 கன அடியாகவும் உள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட ரூல் கர்வ் விதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அணை நிர்வாக குழுவும் மிகுந்த கவனம் செலுத்துகிறது. அணையின் பொறுப்பில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கவும், உங்கள் முடிவில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளவும் போதுமான அளவு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: