மதுராந்தகம் நகராட்சியில் தேசிய கொடி விற்பனை துவக்கம்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சியில் வீடுகள் தோறும் தேசிய கொடியேற்றி, அமுதப் பெருவிழா கொண்டாடும் வகையில நகர்மன்ற தலைவர் மலர்விழி குமார்  தேசிய கொடி விற்பனையை தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவையொட்டி, தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசின் அறிவுறுத்தல் படி சுதந்திரத்திருநாளை அமுத பெருவிழாவாக கொண்டாட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தில்  ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது.

இந்த கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் அருள் முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.

சுதந்திர தினத்தையொட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் வீடுகள் தோறும் இம்மாதம் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை தேசியக்கொடியை ஏற்றி, சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடுவதற்கு நகரமன்ற உறுப்பினர்கள் முயற்சி செய்ய வேண்டும், நகரில் உள்ள 24 வார்டுகள் தோறும் நகராட்சி சார்பில் ஒரு தேசிய கொடி ரூ. 9  விற்பனை செய்ய தற்காலிக விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் நகராட்சி  பகுதியிலுள்ள  பொதுமக்கள் எளிதில் தேசியக்கொடியை பெற்று வீடுகள் தோறும் தேசியக் கொடியை ஏற்ற  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  ஆலோசிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து  தேசிய கொடி விற்பனையை  நகரமன்ற தலைவர் மலர்விழி குமார், நகராட்சி ஆணையர் அருள் ஆகியோர் தொடங்கி  வைத்தனர். இந்நிகழ்ச்சியில், நகர மன்ற துணை தலைவர் சிவலிங்கம், மதுராந்தகம் நகர செயலாளர் குமார் உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: