மெரினாவில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

சென்னை: மெரினா கடற்கரையில்  தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.15 ஆயிரம் அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில், கடந்த  5ம் முதல், பிளாஸ்டிக் பயன்படுத்த மாநகராட்சி தடை விதித்தது.

இதுதொடர்பாக, மாநகராட்சி சார்பில் மற்கண்ட கடற்கரை பகுதிகளில் சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இருவேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதம்  விதிக்கப்பட்டு வருகிறது.  

அதன்படி, மெரினா கடற்கரையில் 5ம் தேதி  முதல் நேற்று வரை 4 நாட்களில்  1,391 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 61 கடை உரிமையாளர்களிடமிருந்து 71 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.15,700 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக   சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, நேற்று  பெசன்ட் நகர் எலியட்ஸ்  கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பிளாஸ்டிக் தடுப்பு மற்றும் தூய்மை பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.  மேலும், கடற்கரையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மண்டல அலுவலரிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது  துணை மேயர் மகேஷ் குமார் , அடையாறு மண்டல குழு தலைவர் துரைராஜ், துணை ஆணையாளர் (வ ம நி) விஷு மஹாஜன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் (பொ) ஷேக் அப்துல் ரஹ்மான், மாமன்ற உறுப்பினர்  ராதிகா  உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: