அம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் அக்னி குண்டத்தில் விழுந்து பக்தர்கள் 3 பேர் படுகாயம்

பெரம்பூர்: பெரம்பூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி அம்மன் கோயிலில் 25ம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், பெரம்பூர், திரு.வி.க நகர்ல கொளத்தூர்ல வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, அக்னி குண்டத்தில் இறங்கி நேத்திக் கடன் செலுத்தினர். புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் உதவி கமிஷனர்கள் அழகேசன், செம்பேடு பாபு, தமிழ்வாணன் மற்றும் 16 இன்ஸ்பெக்டர்கள் என 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மாலையில், தீமிதி திருவிழா தொடங்கியது. பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்திக் கொண்டிருந்தனர். இரவு 10 மணிக்கு பெரம்பூர் நட்டால் கார்டன் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரேம்நாத் (32), தீயில் இறங்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வயிற்று பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல், கொடுங்கையூர் ஜம்புலிங்கம் தெருவை சேர்ந்த பெயின்டர் மகி (35), தீயில் இறங்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கும் கை மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரம்பூர் ரமணா நகரை சேர்ந்த வெல்டர் பாலா (45) என்பவரும் தீ மிதிக்கும்போது தவறி விழுந்து, காயம் ஏற்பட்டதால், பெரியார் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: