தமிழக கவர்னருடன் அரசியல் பற்றி பேசினேன்: சந்திப்புக்கு பின் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: தமிழக கவர்னர் ரவியை நடிகர் ரஜினிகாந்த் திடீரென சந்தித்து பேசினார். அப்போது, அரசியல் பற்றி பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் டெல்லிக்கு சென்றார். அங்கு நடந்த ஒரு விழாவில் அவர் பங்கேற்றார். நேற்று முன்தினம் இரவு அவர் சென்னை திரும்பினார். இந்நிலையில் நேற்று பகல் 11 மணியளவில் சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என். ரவியை சந்திக்க ரஜினிகாந்த் வந்தார். அவரை தனியாக சந்தித்து, அவர் பேசிக்கொண்டிருந்தார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம், கவர்னரை ரஜினிகாந்த் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கவர்னரை சந்தித்து விட்டு வந்த ரஜினிகாந்த், நிருபர்களிடம் கூறியதாவது: இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கவர்னரிடம் அரசியலை பற்றி பேசினேன். அது தொடர்பாக இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. எனது ஆன்மிக உணர்வு கவர்னருக்கு பிடித்திருக்கிறது. அவர் தமிழகத்தை நேசிக்கிறார். தமிழகத்துக்காக நல்லதை செய்ய விரும்புகிறார். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் கிடையாது என முன்பே சொல்லிவிட்டேன். அதனால் நான் அரசியலுக்கு வர மாட்டேன்.இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

Related Stories: