பம்மல் திருப்பனந்தாள் ஏரி ₹99.50 லட்சத்தில் சீரமைப்பு

தாம்பரம்:  தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருப்பனந்தாள் ஏரி உள்ளது. இந்த ஏரி, ஈஸ்வரன் நகர், அண்ணா சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு, முக்கியமான நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது இந்த ஏரி ஆக்கிரமிப்புகளால் சுமார் 9 ஏக்கர் அளவிற்கு சுருங்கி உள்ளது. இந்த ஏரியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல நடைபாதை, கரையை சுற்றி சூரிய மின் சக்தி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த ஏரி முறையாக பராமரிக்கப்படாததால், பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலந்து வந்ததால் நீர் மாசடையும் நிலை ஏற்பட்டது.

இதை தடுத்து, ஏரியை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹99.50 லட்சம் மதிப்பீட்டில் திருப்பனந்தாள் ஏரியை புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சமீபத்தில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஏரி பகுதியில் நடப்பட்டது. ஆய்வின்போது, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாநகராட்சி செயற்பொறியாளர் முருகேசன், மண்டல தலைவர் கருணாநிதி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: