கோயம்பேட்டில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேருக்கு தர்ம அடி

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க வருகின்றவர்கள் மற்றும் வியாபாரிகளின் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோனது. இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பைக் திருடர்களை பிடிக்க வியாபாரிகளும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மார்க்கெட்டில் நிறுத்தி இருந்த ஒரு பைக்கை 2 பேர் திருட முயன்றனர். இதை பார்த்த வியாபாரிகள், அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர்,  கோயம்பேடு போலீசில் அவர்களை ஒப்படைத்தனர். விசாரணையில், மதுரவாயல் கன்னியம்மன் நகரை சேர்ந்த செல்வம் (37), சரவணன் (50), சின்ன நொளம்பூர் விக்னேஷ்வரா நகரை சேர்ந்த ஹரி (35) என்பதும், இவர்கள் மார்க்கெட்டில் பைக்குகளை திருடி, நம்பர் பிளேட்டை மாற்றி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

மேலும், இவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் 13க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: