கன மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை; அரசு வழங்கும் தகவல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்

சென்னை: கனமழையின் காரணமாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மேட்டூர் அணையில் இருந்து நேற்று (6ம் தேதி) காலை 9 மணி முதல் 1,50,000 கன அடி உபரி நீரும், பவானிசாகர் அணையில் இருந்து 25,500 கன அடி உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கையாக 22.76 லட்சம் செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை செய்தி, மீன்வள துறை மூலமாக மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்படுவதுடன், மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: