ஊர், ஊராக கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா: கில்லாடி குடும்பம் சிக்கியது

கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் ராமு (60). இவரது மனைவி நாகம்மாள் (55). இவர்களது மகன் சத்யா (34). சத்யாவிற்கும், நந்தினி (32) என்பவருக்கும் சில ஆண்டிற்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ராமு, நாகம்மாள், சத்யா, நந்தினி ஆகியோர் திருடுவதை முழு நேர தொழிலாக கொண்டவர்கள். பல இடங்களில் பெண்களின் நகைகளை திருடுவதில் நாகம்மாள் அதிக அனுபவம் பெற்றவர். திருச்சி, பாலக்காடு, மதுரை என இவர் பல இடங்களில் நகை பறித்துள்ளார். 5 முறை சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில், தனிப்படை போலீசார் ராமு, நாகம்மாள், சத்யா ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் ஆர்.எஸ்.புரம் பகுதியில் பெண் ஒருவரிடம் 8 பவுன் நகை பறித்தனர்.  கோனியம்மன் கோயில் விழாவில் 3 பேரிடம் 12 பவுன் தங்க நகை பறித்தனர். இவர்களிடமிருந்து 20 பவுன் தங்க நகை, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் பாப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் பங்களா வைத்திருப்பது தெரியவந்தது. நகை பறித்ததும் இவர்கள் அதை உருக்கி விற்பனை செய்து விடுவது வழக்கம். கைதான 3 பேரும் அளித்த வாக்குமூலத்தில்,‘‘கொள்ளையடித்த பணத்தில் மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற பல்வேறு நாடுகளுக்கு உல்லாச சுற்றுலா சென்று ஜாலியாக இருந்தோம். சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தோம்’’ என்றனர்.

Related Stories: