பவானிசாகரில் 20,000 கன அடி நீர் திறப்பு; கோயில், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின: அமராவதி ஆற்று தடுப்பணை சுழலில் சிக்கி வாலிபர் பலி

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால், கோயில், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பவானிசாகர் அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் 25 ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.  இதனால், தண்ணீர் இருகரைகளையும் தொட்டவாறு ஆர்ப்பரித்து சென்றது. இதில் பெரிய மரக்கட்டைகள், மரங்களை வேருடன் அடித்துச்சென்றன. ஆற்றங்கரையில் உள்ள கோயில்கள், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. நேற்று மதியம் நீர் திறப்பு 20 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

அமராவதி ஆற்றில் வெள்ளம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ள எச்சரிக்கையை மீறி மூலனூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி தினேஷ் குமார் (24), இவரது தம்பி கவின் (22), நண்பர் அமீர் (19) ஆகிய 3 பேர் அமராவதி ஆற்றின் தடுப்பணை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் இறங்கி குளித்தனர்.  அப்போது,  தினேஷ் குமார் சுழலில் சிக்கி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற கவின், அமீர் ஆகியோரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் தீயணைப்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர்.

நீலகிரியில்: நீலகிரி மாவட்டம், குன்னூர், கேத்தி பகுதியில் தண்டவாளத்தில் இரண்டு இடங்களில் ராட்சத மரம் விழுந்தது. இதனால், குன்னூரில் இருந்து புறப்பட்ட மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அருவங்காடு பகுதியில் இருந்து பஸ் மூலம் ஊட்டி அனுப்பி வைக்கப்பட்டனர். ரயில்வே பணியாளர்கள் உதவியுடன் தண்டவாளத்தில் விழுந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது. 2 மணி நேரத்திற்கு பின்னர் மலை ரயில் இயக்கப்பட்டது. இதனிடையே ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் நடுவட்டம் அருகே ஆகாச பாலம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கனமழை காரணமாக நேற்று காலை கொடைக்கானல் - தாண்டிக்குடி சாலையில், பண்ணைக்காடு பிரிவு அருகே சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினரும், வனத்துறையினரும் உள்ளூர் மக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீராக்கினர்.

நாமக்கல் மாவட்ட பாதிப்பு: காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அமைச்சர்கள் சந்தித்து உதவித்தொகை வழங்கினர். பின்னர் அமைச்சர் நேரு கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் கொடுப்பது குறித்து பேசி வருகிறோம் என்றார். பள்ளிபாளையம் பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களையும்அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

கொள்ளிடம் கரையோரம் தவித்த மக்களை படகில் மீட்டு வந்த அமைச்சர்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கீழவாடி, நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு அளக்குடி, துளசேந்திரபுரம், அனுமந்தபுரம் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கலெக்டர் லலிதா, எஸ்பி நிஷா உள்ளிட்டோர் நேற்று படகின் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கிருந்து வீடுகளில் சிக்கி தவித்தோர்களை படகின் மூலம் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.

மேட்டூர் அணையில் நீர்திறப்பு 1.30 லட்சம் கனஅடியாக குறைப்பு: மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 1,80,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் நீர்திறப்பு 1.30 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் புகுந்த பகுதிகளில் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது.

Related Stories: