கலைஞரின் நினைவு நாள்; முதல்வர் தலைமையில் இன்று அமைதி பேரணி: திமுக முன்னணியினர், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்

சென்னை: கலைஞரின் 4வது நினைவு நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதி பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் திமுக முன்னணியினர், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். தகைமைசால் தலைவராக-எழுத்தாளராக-கவிஞராக-சொற்பொழிவாளராக-திரைக்கதை வசன கர்த்தாவாக-இலக்கியவாதியாக-திரைப்பட தயாரிப்பாளராக தலைசிறந்த நிர்வாகியாக-தமிழகத்தின் ஐந்து முறை முதல்வராக-உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் கலைஞர்.

திராவிட இயக்கத்தின் போர்வாள்களில் ஒருவராக தமது பொதுவாழ்வை தொடங்கி, பின்னர், காஞ்சி தந்த காவிய தலைவர் அண்ணாவோடு திமுகவில் தொடர்ந்து பணியாற்றி, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திமுகவின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்டவர் கலைஞர். அவரின் 4வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடக்கிறது.

சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள  கலைஞர் சிலை அருகிலிருந்து காலை 8.30 மணிக்கு தொடங்கும் அமைதி பேரணி, காமராஜர் சாலையில் அமைந்துள்ள  கலைஞர் நினைவிடத்தில் முடிவடைகிறது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

Related Stories: