தமிழ்நாட்டில் சமூக நீதி சிறப்பாக உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் புகழாரம்

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 19, 20ம் நூற்றாண்டுகளிலேயே கல்வி வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. இந்தியாவில் சமூக நீதியும் அப்போதை வந்துவிட்டது. பெண்கள் சுதந்திரம் என்பது அவர்களுக்கு தரும் கல்வியை பொறுத்துத்தான் அமையும். கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறார்கள். அதனால்தான் அனைத்து துறைகளிலும் பெண்கள் அதிகம் பங்கேற்று வருகிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண் நீதிபதிகள் உள்ளனர்.

அவர்கள் ஒதுக்கீடு மூலம் வரவில்லை. தங்களின் கல்வி மற்றும் திறமையால் வந்துள்ளனர். பின்தங்கியவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டைபோல் மற்ற மாநிலங்களிலும் இருக்க வேண்டும். தமிழகம் சமூக நீதியில் சிறந்து விளங்குகிறது. வள்ளலார், பெரியார் போன்றவர்களால் இது சாத்தியமானது. சட்டவிரோத கைது, லாக்கப் மரணங்கள் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் நிலை வந்தால் ஒட்டுமொத்த பிரச்னையும் தீர்ந்துவிடும். தமிழகத்தில் சமத்துவமும், சமூக நீதியும் சிறப்பாக கடை பிடிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

சென்ைன உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசியதாவது: மனிதநேயம் தான் மனித உரிமையின் முக்கிய கருத்தாகும். மனித உரிமைகள் குறித்து அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்துவது அவசியம். அதுதொடர்பான விழிப்புணர்வு ஊடகங்கள், கருத்தரங்கங்கள் மூலம் செய்யப்பட வேண்டும். மனித உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று மதர் தெரசா வலியுறுத்தியுள்ளார். சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிகள், விடுதிகளில் ஆய்வு மிக அவசியம். சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் சிறார்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

இதனால், சிறார்கள் அங்கிருந்து தப்பித்து விடுகிறார்கள். வெளியே வந்தவுடன் அவர்கள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவது நடைபெறுகிறது. எனவே, அவர்களை சரியாக கவனிக்கும் வகையில் தொழில்சாலைகளின் உதவிகளையும் கேட்டு பெற வேண்டும். இந்த விஷயத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: