திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் நிலம் விற்பதாக ரூ. 5 லட்சம் மோசடி 3 மகன்களும் போலீஸ் , எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்த பெண்; பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்

திருவள்ளூர்: அரும்பாக்கம் கிராமத்தில் நிலம் விற்பதாக கூறி 5 லட்சம் மோசடி செய்த பெண், தன்னுடை மகன்கள் 3 பேரும் காவல்துறையில் பணி புரிவதாகவும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி  மிரட்டல் விடுப்பதாகவும் மேலும் கிராம மக்களிடம் அராஜகமாக நடந்து கொள்ளும் 3 மகன்கள், தாய் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் ஏழுமலை .  விவசாயியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் மனைவி அஞ்சலி என்பவரிடம் நிலத்தை வாங்க 8 லட்சத்து 82 ஆயிரம் விலை பேசி முதல் கட்டமாக 5 லட்சத்தையும், அடுத்த கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 3 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துள்ளார். ஆனால் ஏழுமலையிடம் நிலத்தை விற்பதாக சொல்லி பணத்தை வாங்கிய நாராயணன் என்பவரது மனைவி அஞ்சலி என்பவர் பத்திரப் பதிவு செய்ய வராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.  

தொடர்ந்து வற்புறுத்தியதையடுத்து  வாங்கிய பணத்தில் ரூபாய் 3 லட்சத்து 82 ஆயிரம் திரும்பி கொடுத்தனர். மீதி ரூ. 5 லட்சம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

பணம் கொடுத்து 4 மாதங்களுக்கு மேலாகியும் பணம் தராதது குறித்து அஞ்சலியிடம் கேட்டுள்ளார் ஏழுமலை. அதற்கு பணத்தை வாங்கவே இல்லை என்றும்,எனது 3 மகன்களும் போலீசில் இருப்பதால் உன்னால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இதில் நரேஷ் திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்திலும், சுரேஷ் என்பவர் ஆவடி மாநகர காவல் அலுவலகத்திலும், கார்த்திக் புழல் மத்திய சிறைப் பிரிவிலும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஏழுமலை என்பவர் ஊராட்சி மன்றத் தலைவரான  ஏ.ஆர்.வெற்றி வேலை அணுகியுள்ளார். இதனையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் என்ற முறையில் வெற்றிவேல் அஞ்சலியிடம்  விசாரித்துள்ளார். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் என்றும் பார்க்காமல் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

வெற்றிவேலின்  மகன்கள் மீது பொய் புகார் கொடுத்து மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்ற விவசாயி தான் அறுவடை செய்த நெல்லை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வரும்போது, போலீசில் பணியாற்றும் அஞ்சலியின் மகன்கள் 3 பேரும் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், இந்த தெரு வழியாக எங்களை கேட்காமல் வரக்கூடாது என்றும் பகிரங்கமாக கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் அரும்பாக்கம் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த நிலம் வாங்க பணம் கொடுத்து ஏமாந்த ஏழுமலை, விவசாயி செல்வம்,  ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்ட அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கம் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று திருவள்ளூர் எஸ்பியிடம் புகார் மனுவை அளித்தனர்.

நிலம் விற்பனை செய்வதாக ரூ. 5 லட்சம்  வாங்கிக்கொண்டு ஏமாற்றிய அஞ்சலி என்பவர் மீதும், அவரது மகன்கள் 3 பேர் போலீசில் வேலை செய்வதாக சொல்லி மிரட்டுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் தங்கியிருக்கும் தெரு வழியாக செல்லும் விவசாயி மற்றும் பொதுமக்களை மிரட்டும் நரேஷ், சுரேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: