தனது அறக்கட்டளை பெயரில் பணம் வசூலித்து மோசடி; பாஜ நிர்வாகியான நடிகை ஜெயலட்சுமி மீது புகார்: கமிஷனர் அலுவலகத்தில் பாடலாசிரியர் சினேகன் அளித்தார்

சென்னை: தனது அறக்கட்டளை பெயரில் மக்களிடம் இருந்து பணம் பறித்து மோசடி செய்து வரும் பாஜ நிர்வாகி சின்னத்திரை நடிகை ெஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினிமா பாடலாசிரியர் சினேகன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகர் பகுதியை சேர்ந்த சினிமா பாடலாசிரியர் சினேகன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் ‘சினேகம் பவுண்டேசன்’என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையை கடந்த 23.12.2015 முதல் நடத்தி வருகிறேன். எனது அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை சிறப்பாக சட்டத்திற்கு உட்பட்டு, எந்தவித புகாருமின்றி தற்போது வரை செய்து வருகிறேன்.

சமீப காலமாக எனது அறக்கட்டளை பெயரை  சின்னத்திரை நட்சத்திரம் மற்றும் வழக்கறிஞருமான ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தியும், தவறான விலாசம் கொடுத்து இணையதளத்தில் தான்தான் ‘சினேகன் அறக்கட்டளை’நிறுவனர் என்று பொதுமக்களுக்கு நற்பணி செய்வதாகவும், அதற்கு இணையதளம் மூலம் எனக்கு ெசாந்தமான அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நிதி வசூலித்ததாக பல புகார்கள் வந்தது. நான் பொதுமக்களிடம் பொது வெளித்தளங்கள் மூலம் இதுவரை எந்த நிதியும் திரட்டவில்லை. ஜெயலட்சுமி எனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நிதி வசூலித்ததாக வருமான வரித்துறை எனது கவனத்துக்கு கொண்டு வந்தார்கள்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினால் அது  தவறான முகவரி என்று திரும்பி வந்துவிட்டது. எனவே, எனது அறக்கட்டளையை இயக்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து தொலைபேசி மூலம் பொதுமக்களை தனியாக சந்தித்து அவர்களை தன் வலையில் வீழ்த்தி பணத்தை பறிக்கும் ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். மேலும், அந்த போலியான இணைய தளத்தை முடக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: