அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு புத்தக கண்காட்சி நடக்க வேண்டும்: புத்தக திருவிழாவை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு புத்தகக் கண்காட்சி நடக்க வேண்டும் என்று புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஈரோடு, சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது: பதினெட்டாவது ஈரோடு புத்தகத் திருவிழாவை காணொலி வாயிலாகத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தந்தை பெரியார் பிறந்த ஊர், பேரறிஞர் அண்ணா வாழ்ந்த ஊர் தலைவர் கலைஞர்  குடியிருந்த ஊர். திராவிட இயக்கம் இன்று இத்தனை பேரும் புகழும் பெற்ற இயக்கமாக இருக்கிறது என்றால், நம்முடைய தமிழினம் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நிச்சயமாக இந்த ஈரோடு ஆகத்தான் இருந்திட முடியும். அறிவாசான் பெரியார்பிறந்த ஊரில் - அறிவுத் திருவிழாவான புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைப்பதில்  மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

 சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பை பெற்றேன். சென்னையைத் தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் தான் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு இத்தகைய புத்தகக் கண்காட்சி நடக்க வேண்டும். அதற்காக இந்த ஆண்டு ரூ.4 கோடியே 96 லட்சம் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பதிப்பாளர்களின் நெடுநாள் கோரிக்கையான நிரந்த புத்தகப் பூங்கா அமைப்பதற்கான ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கி இருக்கிறது. பதிப்பகங்களோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு தமிழ்நாடு அரசும் ஏராளமான நூல்களை வெளியிட்டு வருகிறது என்பதை கம்பீரமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 1960-70ம் ஆண்டுகளில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட 875 நூல்களில் 635 நூல்களை இந்த ஓராண்டு காலத்தில் மறுபதிப்பாக கொண்டு வந்துள்ளோம். தமிழின் மிகச் சிறந்த படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளது. இத்தகைய மொழிபெயர்ப்பு பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அண்ணா குறித்த ‘மாபெரும் தமிழ் கனவு’ ஆங்கிலத்திலும் - வைக்கம் போராட்டம் மலையாளத்திலும் - கலைஞரின் திருக்குறள் அதனுடைய உரை தெலுங்கிலும் - ஜானகிராமன் சிறுகதைகள் கன்னடத்திலும் வரப் போகின்றன.

கால்டுவெல்லின் ‘திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலை மொழி அறிஞர் பா.ரா.சுப்பிரமணியம்  மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். அதனை அரசு வெளியிட்டுள்ளது. சங்க இலக்கிய நூல்களை செம்பதிப்பாக கொண்டு வர இருக்கிறோம். பிறமொழியில் இருந்து தமிழுக்கும் பல்வேறு நூல்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன. குழந்தை இலக்கிய நூல்கள் - 100 வெளியிட இருக்கிறோம். அதில் 27 இதுவரை வெளியாகி உள்ளது. இலக்கிய இலக்கண வளமையும் தமிழ் மொழிக்கு உண்டு. இந்த தமிழ் மொழி தான் தமிழ் இனத்தைக் காக்கும் காப்பரணாக அமைந்திருக்கிறது.

பட்டங்கள் வாங்குவதற்காக மட்டுமல்லாமல், அறிவின் கூர்மைக்காக, நம்முடைய சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்காக, நாம் கடந்து வந்த பாதையை அறிந்துகொள்வதற்காக, நாம் போக வேண்டிய திசையை சென்றடைவதற்காக, அறிவார்ந்த புத்தகங்களை அனைவரும் வாசிக்க வேண்டும். அதனால் தான் என்னைச் சந்திக்க வருபவர்கள் மாலைகள், சால்வைகள், போர்வைகள் அணிவிக்க வேண்டாம், புத்தகங்களைத் தாருங்கள் என்று நான் கேட்டுக் கொண்டேன். புத்தகம் வழங்குவது இன்றைக்கு ஒரு இயக்கமாகவே தமிழ்நாட்டில் மாறி இருக்கிறது.  இந்த இயக்கம் விரிவடைய வேண்டும், வலுவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

இளைஞர்களே நிறைய படியுங்கள், ஏன்எதற்கு எப்படி? என்று கேளுங்கள் ஒரு செய்தி உங்களை வந்தடைகிறது என்றால், அதனை உடனே முழுமையாக நம்பிவிடாதீர்கள்.அதன் உண்மைத்தன்மையை ஆராயுங்கள்.இட்டுக்கட்டிக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுபவர்கள் - அந்தக் கலையில் தேர்ந்தவர்கள், ஆண்டாண்டு காலமாக கட்டுக்கதைகளை நம்ப வைக்கும் திறனைப் பெற்றவர்கள். ஆனால், தமிழ்ச்சமூகம் பகுத்தறிவுச் சமூகம், பொய்களையும் - கட்டுக்கதைகளையும் வென்ற சமூகம் தமிழகம் அறிவுப் புரட்சி மாநிலமாக - பகுத்தறிவுப் புரட்சி மாநிலமாக மாறுவதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் அனைத்து நகரங்களிலும் நடைபெற வேண்டும். அறிவே அனைத்துக்கும் அரண்.எல்லாவற்றுக்கும் ஈரோடு வழிகாட்டியது போல புத்தகத் திருவிழாவுக்கும் வழிகாட்டுகிறது ஈரோடு, விழா சிறக்க என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: