பெரியகுளம் பகுதியில் கனமழை 3000 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி நாசம்-விவசாயிகள் கவலை

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் தொடர் கனமழையால் 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்களம், சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் நல்ல விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பாகவே இந்த பகுதியில் நெல் அறுவடை பணிகளை துவங்கிய நிலையில், கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருவதால் மேற்கொண்டு அறுவடை பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து நிலங்களில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடர் கன மழையால் நெற்பயிர்கள்  சேதமடைந்து நீரில் மூழ்கி வருகிறது.

இதனால், தொடர்ந்து அறுவடை பணிகள் செய்ய முடியாத நிலையால் முற்றிலும் நெல் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.  மழையில் நனைந்து சேதமடைந்த நெல்லை கூலியாட்களை கொண்டு உலர்த்தி பாதுகாக்க அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, மழையால் சேதமடைந்துள்ள நெல் பயிர்களை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: