அனைத்து நாட்டு மக்களையும் ஈர்க்கும் இடமாக திகழ்கிறது மாமல்லபுரம்; புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்து செஸ் வீரர்கள் பிரமிப்பு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

சென்னை:  வெளிநாட்டு செஸ் வீரர், வீராங்கனைகள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து பிரமிப்பு அடைந்தனர். இவை, அனைத்து நாட்டு மக்களையும் ஈர்க்கத்தக்க இடமாக திகழ்வதாக தெரிவித்தனர். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 29ம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில், 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். போட்டிகள் அனைத்தும் 11 சுற்று அடிப்படையில் நடக்கிறது. இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இன்னும், 5 சுற்று போட்டிகள் நடக்க இருக்கிறது.  வரும் 9ம் தேதியுடன் போட்டி நிறைவடைகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு நேற்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

அவர்கள், நேற்று காலை மாமல்லபுரம் அடுத்த முட்டுக்காடு முதலை பண்ணையில் குவிந்தனர். அங்கு, கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள முதலைகளுக்கு அருகே நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர், மாமல்லபுரம் சென்று புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை கல் பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்டவைகளை சுற்றிப் பார்த்து பிரமிப்பு அடைந்தனர். புராதன சின்னங்கள் முன்பு நின்று செல்பி மற்றும் குழுப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா வழிகாட்டிகள் மாமல்லபுரத்தின் சிறப்பு, புராதன சின்னங்கள் எந்த காலத்தில் எந்த மன்னரால்  செதுக்கப்பட்டது என்பது குறித்து வீரர், வீராங்கனைகளுக்கு தெளிவாக எடுத்துக் கூறினர். வீரர், வீராங்கனைகள் கூறுகையில்,‘‘நாங்கள் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, தமிழ் கலாச்சாரப்படி நல்ல முறையில் உபசரித்து தமிழ்நாடு அரசு வரவேற்றது.

தமிழ் மண்ணில், வாழ்பவர்கள் மிகவும் அழகானவர்கள். தமிழகத்தின், உணவு விரும்பி சாப்பிடும் வகையில் சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டு, மக்கள் அனைவரும் நல்ல முறையில் பழகக் கூடியவர்கள். மாமல்லபுரம், சுற்றுலாத்தலம் உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களையும் ஈர்க்கக் கூடிய இடமாக திகழ்கிறது. இங்குள்ள, சிற்பங்கள் பிரமிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. இயந்திரங்கள் இல்லாத காலத்தில் எப்படி இந்த சிற்பத்தை உருவாக்கினர் என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. வெண்ணை உருண்டை கல் என்று அழைக்கப்படும் ஒரு கல், எந்தவித பிடிப்பும் இல்லாமல் பல ஆயிரம் ஆண்டுகளாக நிற்பது மிகப் பெரிய ஆச்சரியமாக உள்ளது. உலகில், இதுபோன்ற நிகழ்வுகளை எங்கும் காணமுடியாது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மனமார நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’என்றனர்.

Related Stories: