47 ஆண்டுகளுக்கு முந்தையது; பழைய ரூ.20 நோட்டுடன் பேத்திக்கு மிட்டாய் வாங்க வந்த மூதாட்டி: தூத்துக்குடியில் சுவாரசியம்

தூத்துக்குடி: கடந்த 1970-75ல் அச்சிடப்பட்ட பழைய 20 ரூபாய் நோட்டுகளுடன் பேத்திக்கு இனிப்பு வாங்குவதற்காக வந்த மூதாட்டியிடம் கடைக்காரர்கள் இந்த நோட்டு செல்லாது எனக்கூறியதால் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பிச் சென்றார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் திங்கட்கிழமையில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். பெரிய வாரச்சந்தையான இங்கு ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.

வாரச்சந்தை கூடிய நிலையில், 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர் பேத்திக்கு மிட்டாய் வாங்குவதற்காக தன்னிடம் இருந்த ரூ.20 நோட்டில் இரண்டை கடைக்காரரிடம் கொடுத்துள்ளார். அப்போது நோட்டை வாங்கிப் பார்த்த கடைக்காரர், இந்த நோட்டு பழையது, செல்லாது என தெரிவித்து வேறு நோட்டு தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரிடம் வேறு நோட்டு இல்லாததால் கடை, கடையாக அலைந்தும் மூதாட்டியிடம் யாரும் அந்த நோட்டை வாங்கவில்லை. எல்லோருமே இது செல்லாது என்றே கூறியதால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது இந்த ரூ.20 நோட்டு புழக்கத்தில் இல்லை. இதில் ரிசர்வ் வங்கி கவர்னர் ஜெகநாதன் என கையெழுத்து உள்ளது. இவர் 16.6.1970 முதல் 19.5.1975 வரை ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்துள்ளார். அக்காலக்கட்டத்தில் இந்நோட்டு அச்சிடப்பட்டு உள்ளது. தற்போது இந்த நோட்டுகள் புழக்கத்தில் இல்லை. எனவே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இந்த நோட்டை கொடுத்து செல்லுமா? செல்லாதா? எனக் கேட்குமாறு கூறி மூதாட்டியை அனுப்பி வைத்தோம் என்றனர்.

Related Stories: