கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் அரசு பேருந்துக்கு நடுரோட்டில் காத்திருக்கும் மாணவர்கள்: விபத்து நிகழும் அபாயம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் நடுரோட்டிலேயே பள்ளி மாணவ-மாணவிகள் அரசு பேருந்துக்காக காத்திருக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. இதனால் அங்கு அதிகளவு வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படலாம் என மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

 

சென்னை அருகே கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரம் கடந்த 2012ம் ஆண்டு, ரூ.2 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இங்கு கோயம்பேடு, தாம்பரம், தி.நகர், பிராட்வே உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான மாநகர பஸ்கள் வந்து செல்கின்றன. நவீன கட்டண கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருந்தும், நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்பால் மாநகர மற்றும் அரசு பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லாமல், ஜிஎஸ்டி சாலையிலேயே நின்று செல்கின்றன.

 

மேலும், ஜிஎஸ்டி சாலையோரத்தில் பர்மிட் இல்லாத ஏராளமான ஷேர் ஆட்டோக்கள், வேன்கள், தனியார் பேருந்துகள் நீண்ட வரிசையில் பயணிகளை ஏற்றி செல்வதற்கு நிறுத்தப்படுகின்றன. இதனால் மாநகர மற்றும் அரசு பேருந்துகள் ஜிஎஸ்டி சாலை நடுவிலேயே நிறுத்தப்படுகின்றன. இதையடுத்து, ஜிஎஸ்டி சாலை நடுவிலேயே பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அரசு பேருந்துக்காக காத்திருக்கும் அவலநிலை நீடித்து வருகிறது.

அதே சமயம் நடுரோட்டில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் காத்திருக்கும் நிலையில், அவ்வழியே வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயநிலை உள்ளது. இதனால் அங்கு அதிகளவு வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படலாம் என மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. எனவே, ஜிஎஸ்டி சாலையில் செல்லும் அரசு பேருந்துகள் சாலையோரத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: