உயர்கல்வியில் சேர்ந்து வெளியேறும் மாணவர்களின் முழு கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்: யுஜிசி உத்தரவு

சென்னை: நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து, அக்டோபர் 31ம் தேதிக்குள் அதனை ரத்து செய்து வெளியேறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முழுமையாக திருப்பித்தர வேண்டும். இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: சி.பி.எஸ்.இ.12ம் வகுப்பு தேர்வு முடிவு தாமதமானதால், கியூட், ஜே.இ.இ.முதன்மை, ஜே.இ.இ. அட்வான்ஸ்டு உள்ளிட்ட பல நுழைவுத் தேர்வுகளும் தாமதமாகிவிட்டன. இதன் காரணமாக மாணவர் சேர்க்கையை அக்டோபர் மாதம் வரை தொடரலாம் .

மேலும் பெற்றோர் எதிர்கொள்ளும் நிதிக் கஷ்டங்களை தவிர்க்கும் வகையில், வருகின்ற அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை ரத்து, இடம்பெயர்வு உள்ளிட்ட அனைத்து காரணங்களுக்காகவும் படிப்பில் இருந்து வெளியேறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்கல்வி நிறுவனங்கள் முழுமையாக திருப்பித்தரவேண்டும். அக்டோபர் 31ம் தேதி பிறகு, டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்வு செய்த படிப்பை ரத்து செய்யும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட முழு கட்டணத்தில் இருந்து செயலாக்க கட்டணமாக (பிராசசிங் பீஸ்) ரூ.1,000 மட்டும் கழித்து மற்ற தொகையை முழுமையாக திருப்பி கொடுக்கவேண்டும். கொரோனா தொற்று நோயை கருத்தில்கொண்டு,கட்டணத்தை திருப்பித் தருவது தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல்களை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்.

Related Stories: