நேரு உள் விளையாட்டு அரங்கு கழிவறையில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம் செல்லூர் சூரியராஜபுரம் 5வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (31). இவர் சென்னை ஆயுதப்படையின் 29வது பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த மாதம் 13ம் தேதி முதல் பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டது. வழக்கம் போல் நேற்று காலை 10 மணிக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த செந்தில்குமார், சக காவலர்களிடமும் சரியாக பேசாமல் பணியில் ஈடுபட்டிருந்தார். பிறகு மணி 12.24 மணிக்கு செந்தில் குமார் தனது எஸ்எல்ஆர் வகையை சேர்ந்த துப்பாக்கியுடன் விளையாட்டு அரங்கில் உள்ள கழிவறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் கழிவறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

இதை கவனித்த சக காவலர்கள் அங்கு சென்று கழிவறை கதவை உடைத்து பார்த்தபோது, காவலர் செந்தில்குமார் வலதுபுறம் மார்பில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ரத்த காயத்துடன் அவராகவே வெளியே வந்து மயங்கி விழுந்தார். செந்தில்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு காவலரை ஆய்வு செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். துப்பாக்கி சூடு குறித்து பெரிய மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, காவலர் செந்தில்குமாரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த ஒரு வாரமாக யாரிடமும் சரியாக பேசாமல் செந்தில்குமார் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், முழு விசாரணைக்கு பிறகு தான் தற்கொலை குறித்து தெரியவரும்.

Related Stories: