கலைஞரின் நினைவு நாள் பேரணி; திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு

சென்னை: கலைஞரின் 4ம் ஆண்டு நினைவுநாள் அமைதி பேரணியில் திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் நிர்வாக வரலாற்றில் பொற்கால ஆட்சியை தந்தவர் கலைஞர். மறைந்தும் மறையாமல் தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழினத்தின் ஒப்பாரும் மிக்காரும் இலா தனிப்பெரும் தலைவர் கலைஞர்  4ம் ஆண்டு நினைவு நாள் ஆக.7ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வருகிற 7ம் தேதி காலை சென்னையில் அமைதிப் பேரணி தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

அன்று காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு வாலாஜா சாலை வழியாக மெரினா கலைஞர் நினைவிடத்தில் பேரணி நிறைவடைகிறது. கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். பேரணியில் பொது செயலாளர் துரைமுருகன், பொருளார் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணை பொது செயலாளர்கள் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த திமுகவினரும் காலை 8 மணிக்கு எல்லாம் சென்னை அண்ணா சாலையில் உள்ள கலைஞர் சிலை அருகில் அணி திரண்டு வந்து பேரணியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: