குரோம்பேட்டை மாநகர பணிமனையில் ஊதிய ஒப்பந்த 6ம் கட்ட பேச்சுவார்த்தை தீவிரம்: அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு

தாம்பரம்: குரோம்பேட்டையில் உள்ள சென்னை மாநகர போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் இன்று போக்குவரத்து பணியாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 6ம் கட்ட பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் சிவசங்கர் உள்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

 

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பணிமனை மற்றும் பயிற்சி மைய வளாகத்தில், இன்று காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 6ம் கட்ட பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார்.

 

முன்னதாக, இங்கு போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் குறித்து 5 முறை இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று 6ம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. இப்பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் டாக்டர்.கே.கோபால், நிதித்துறை கூடுதல் செயலாளர் ஜி.கே.அருண், சுந்தர் தயாளன், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர், செயலாளர் /கூட்டுனர் குழு, துணைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட 66 பேரவை, தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பேச்சுவார்த்தை சுமூக முடிவை எட்டலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: