ஏலகிரி மலை கோட்டூரில் மினி டேங்க் பழுது குடிநீருக்காக கிணற்றில் தண்ணீர் எடுக்கும் பொதுமக்கள்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும் இங்குள்ள கிராம பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை  துறை அதிகாரிகள் மூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

கோட்டூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் இங்குள்ள பொது மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் மினி டேங்க் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்குள்ள மினி டேங்க் பராமரிக்கப்படாமல், குழாய்கள் உடைந்த நிலையில் இருப்பதால் தற்போது இதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் சிதலமடைந்து வருகிறது.

இதனால் இங்குள்ள பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக அருகில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து வடிகட்டி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். எனவே இங்குள்ள மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்தி வருவதால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே ஊராட்சி நிர்வாகம் இங்குள்ள மினி டேங்க்கை பராமரித்து குழாய்கள் அமைத்து இதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: