முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 692 செயின் பறிப்பு கொள்ளையர்களிடம் விசாரணை; 59 பேர் நன்னடத்தை பிணை பத்திரம் கொடுத்தனர்

சென்னை: சென்னையில் தொடர் செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 692 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களில் 59 பேர் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.

சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும், கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மேற்பார்வையில் துணை கமிஷனர்கள் கண்காணிப்பில் உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதில் தொடர் செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 692 செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், பல்வேறு வழக்கில் தலைமறைவாக இருந்த 5 செயின் பறிப்பு குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 159 குற்றவாளிகளை போலீசார் கடுமையாக எச்சரித்து, போலீசாரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினர்.

பிடிபட்ட குற்றவாளிகளில் 59 பேர், அந்தந்த துணை கமிஷனர்கள் முன்பு இனி எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டோம் என்று நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: