மேலக்கோட்டையூர், கேளம்பாக்கம் கோயில் திருவிழாக்களில் 50 சவரன் செயின் பறிப்பு

திருப்போரூர்: கேளம்பாக்கம் மற்றும் மேலக்கோட்டையூர் கோயில்களில் நடந்த  திருவிழாக்களில் 50 சவரன் தங்க செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். வண்டலூர்அருகே  மேலக்கோட்டையூரில் தேவி கருமாரி அம்மன் கோயில் உள்ளது. கடந்த திங்கட்கிழமை முழுவதும் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி மேலக்கோட்டையூர், கீழக்கோட்டையூர், நல்லம்பாக்கம், கண்டிகை, கீரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பெண்கள் விரதமிருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், அன்று இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட 8க்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து 30 சவரன் தங்க செயின்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

இவர்களில் மேலக்கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள், கோதை, சூசன்னா உள்ளிட்டோர் தாழம்பூர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிப் பதிவுகளை நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மர்ம பெண்கள் சிலர் வாயில் இருந்து பிளேடு போன்ற பொருளை எடுத்து கோயிலுக்கு வந்த பெண்களின் கழுத்தில் இருந்த செயினை (நுதனமாக) அறுக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதேபோன்று, கேளம்பாக்கத்தில் புகழ்பெற்ற கேளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலிலும் நேற்று முன்தினம் ஆடிப்பூர விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்துக் கொண்ட 5க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து 15 சவரன் தங்க செயின்கள் பறிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது, ஒரே கும்பல் என்ற ரீதியில் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் செயின் பறிப்பு கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

Related Stories: