காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளைஞர்களை சீரழிக்கும் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; எஸ்பியிடம் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் விற்பனையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகரிடம் அக்கட்சியினர் மனு அளித்தனர்.

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: உலகிலேயே அதிக அளவில் இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தமிழ்நாட்டில் 34 வயதுடையோர் 50 விழுக்காடு உள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவார்கள் என்று நம்பும்  நிலையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நிலை உருவாகி உள்ளது.

போதை பொருட்கள் பெட்டிக்கடைகளில் கூட விளம்பரப் பொருளாக தொங்கவிடப்பட்டு அவர்களின் ஆவலை தூண்டும் விதமாக செயல்படுவது முக்கிய காரணமாக விளங்குகிறது. காவல் துறையினர் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தாலும் தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால் வட மாநில தொழிலாளர்கள் போதை பொருட்களை அதிகம் விரும்பி கேட்பதால் இதன் விற்பனை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெரும்புதூர், ஒரகடம் குன்றத்தூர் பகுதிகளில் பெரும் அளவு போதை பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில் உள்ளது. எனவே, காவல்துறை அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்து அவர்களுக்கு எச்சரிக்கை விட வேண்டும். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முற்றிலும் போதை பொருட்கள் தடை செய்து, இளைஞர்களின் வாழ்வுக்கு காவல் துறை உதவ வேண்டும். இவ்வாறு இதில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: