காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆடிப்பூரம் விழா கோயில்களில் சிறப்பு அபிஷேகம்: பால் குடம் ஊர்வலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆடிப்பூர திருவிழா கோயில்களில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடிப்பூர நாளில் அனைத்து உலகத்தையும் படைத்தும், காக்கும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தன காப்பு, குங்கும காப்பு நடத்துவார்கள். அம்மன் நித்ய கன்னி என்பதால் அம்மனுக்கு பிள்ளைப்பேறு வளைகாப்பு கிடையாது என்பது ஐதீகம். எனவே, ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில், காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் உற்சவர் வரதராஜ பெருமாள் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்ததனர்.

108 திவ்யதேசத்தில் ஒன்றான காஞ்சிபுரம் கோமளவல்லி தாயார் சமேதயதோக்தகாரி பெருமாள் கோயிலில் ஆடிபூரத்தை முன்னிட்டு ஆண்டாளுடன் யதோக்தகாரி  பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று பின்பு சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதி சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், ஊஞ்சல் சேவை, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இவ்விழாவில், பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். மேலும், கருக்கினில் அமர்ந்தவள் திருக்கோயிலில் அம்மன் சந்தன காப்பு மற்றும் வளையல் காப்பு கோலத்தில் விஸ்வரூப தரிசனம் அளித்தார். இதன் பின் அம்மனுக்கு மஞ்சள் காப்பு மற்றும் வளைகள் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிங்கபட்டு விஸ்வரூப தரிசனத்தில் அம்மன் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து அம்மனுக்கு ஆடிப்பூர படையல் இட்டு சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது. படையலிடப்பட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆடிப்பூர விழாவில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்ட முழுவதும் ஆடிப்புர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு அருகே மின்னல் கீழ்மின்னல் கிராமம் உள்ளது. இங்குள்ள, வடமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூர பெருவிழா நேற்று மிகச் சிறப்பாக நடந்தது. இந்த விழாவையொட்டி கோயில் வளாகம் மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மின்னல் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மன் கோயிலில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் பால் குடங்கள் எடுத்து ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு லலிதாம்பிகை யோகபீட நிறுவனர் மற்றும் அறங்காவலர் வி.எஸ்.துரை சிவாச்சாரியார் லலிதாம்பிகை அம்மனுக்கு

பாலபிஷேகம் செய்து வைத்தார். தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க அம்மனுக்கு பதினாறு வகை பொருட்களை கொண்டு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்  நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த  லலிதாம்பிகையை அன்னையை கூடி இருந்த பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர்.

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் செ. பாலாஜி, மக்கள் தொண்டர் மணிபிள்ளை மற்றும் மின்னல் கீழ்மின்னல் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை லலிதாம்பிகை யோக பீட அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர். திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பிரணவமலையில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி நான்கு மாட வீதிகளிலும் ஊர்வலமாக சென்று மீண்டும் பிரணவமலையை அடைந்தனர். அங்கு பக்தர்களிடம் இருந்து பால் குடம் பெற்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர், இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்போரூர் கந்தசாமி கோயிலிலும் ஆடிப்பூரத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்காக சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உத்திரமேரூர்:  உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட சதுக்கம் பகுதியில் மிகவும் பழமைவாய்ந்த துர்க்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் 32ம் ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவ பாலாபிஷேகம் விழா நேற்று நடந்தது. மஹோற்சவத்தை முன்னிட்டு  நேற்று காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் முத்து பிள்ளையார் கோயிலிருந்து 1008 பால்குடங்களுடன் புறப்பட்டனர்.  நாதஸ்வர மேளதாளங்கள், தாரை தப்பட்டை வாதியங்களுடன், வானவேடிக்கைகள் முழங்க பஜார் வீதி, சன்னதி தெரு, கச்சேரித் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பக்தர்கள் கோயிலை வந்தடைந்தனர்.

இதனை தொடர்ந்து, துர்க்கையம்மனுக்கு பக்தர்கள் வரிசையில் நின்று தங்கள் கரங்களால் பால் அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர்.  பிற்பகல் கோயில் வளாகத்தில் பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு, படையலிட்டு அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து, கோமாதா பூஜை கோவில் வளாகத்தில் மாலை நடந்தது.

பின்னர், இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் துர்கையம்மன் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை முதல் மாலை வரை அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவுடன் கூடிய அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: