கூகுள் பே மூலம் பணம் அனுப்பி ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது: 20 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை ஒழிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஓடிசா மாநிலத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், நேற்று காலை பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் தலைமையில் போலீசார் பெரம்பூர் லோகோ பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகப்படும் வகையில், 2 பேர் கையில் பெரிய பையுடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது, ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தை சேர்ந்த கிஷோர் பீர் (35), மன்வீர் பீர் (25) என்று தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அம்பத்தூர் மண்ணூர்பேட்டை பகுதியை சேர்ந்த அர்ஜூன் தாஸ் (35) என்பவர், கூகுள் பே மூலம் பணம் அனுப்பி ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கொண்டுவர ஏற்பாடு செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அர்ஜூன்தாசுக்கு போன் செய்து, கஞ்சாவை கொடுப்பது போல ரயில் நிலையத்துக்கு வரவழைத்து அவரையும் கைது செய்தனர்.  விசாரணையில், அர்ஜூன் தாஸ் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளது என்றும், ஒடிசாவில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலுடன் அர்ஜூன் தாசுக்கு ரகசிய தொடர்பு இருப்பதும், கூகுள் பே மூலம் அந்த கும்பலுக்கு பணம் அனுப்பிவைத்து கஞ்சாவை ரயில் மூலம் வரவழைத்து சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் என்பதால், அங்கு இறங்கி, லோகோ வழியாக வெளியே வந்தபோது  இவர்கள் சிக்கியதும் தெரிந்தது. ஒரு தடவை கஞ்சாவை சென்னைக்கு கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்வதற்காக 5 ஆயிரம் ரூபாய் வரை அர்ஜூன் தாஸ் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: