கச்சநத்தம் 3 பேர் படுகொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள்: சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சிவகங்கை: கச்சநத்தத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள். இவர்களுக்கான தண்டனை விபரம் நாளை தெரிவிக்கப்படும் என சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகிய 3 பேர், கடந்த 2018 மே மாதம் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். கோயில் திருவிழாவில் மரியாதை அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இச்சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் திருப்பாச்சேத்தி, ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரகுமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பிரசாந்த் மற்றொரு சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார். அக்னீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் தலைமறைவாக உள்ளார். 3 பேர் சிறார்கள் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. மற்ற 27 பேர் மீதான வழக்கு சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் எனவும், இவர்களுக்கான தண்டனை நாளை (ஆக. 3) அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களை உறவினர்கள் சந்திக்க அனுமதி கேட்டபோது போலீசார் மறுக்கவே சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களை சிவகங்கை தாசில்தார் தங்கமணி மற்றும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

Related Stories: