ஆவினில் குறைவாக பால் வழங்க காரணமான அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: ஆவினில் குறைவாக பாலை வழங்க காரணமானவர்கள் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: ஆவின் நிறுவனத்தில் மக்களுக்கு வழங்கப்படும் பாலில் சுமார் 70 மில்லி அளவை குறைத்து அரை லிட்டர் பால் கவரில் வெறும் 430 மில்லி மட்டுமே தோராயமாக வழங்கி வருகிறது, என்ற அதிர்ச்சி தகவல்  இப்போது ஆதாரத்துடன் வெளியாகி இருக்கிறது. வெறும் 70 மில்லி தானே குறைந்தது என்றும், தெரியாமல் நடந்து விட்டது என்றும் யாரும் தப்பிக்க முடியாது. தமிழகத்தில் தோராயமாக 35 லட்சம் லிட்டர் அதாவது சுமார் 70 லட்சம் அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் தினமும் விற்பனையாகின்றன.

ஒரு பாக்கெட்டிலேயே சுமார் 70 மில்லி குறைகிறது என்றால், கிட்டத்தட்ட ஒரு கவர் பாலுக்கு (ரூ.3.08) மூன்று ரூபாய் எட்டு காசுகள் குறைய வேண்டும். கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 2 கோடியே 16 லட்சம் ரூபாய் அளவிற்கு மக்களின் பணம் ஏமாற்றப்பட்டு இருக்கிறது.

ஒரு இயந்திர கோளாறினால் அறியாமல் ஏற்பட்ட தவறு என்று ஒரு பேச்சுக்காக வைத்து கொண்டால் தவறு நடந்த முதல் நாளே ஐந்து லட்சம் லிட்டர் பால் மிச்சமாகி இருக்குமே, தொடர்ந்து தினமும் 5 லட்சம் லிட்டர் பால் மிச்சமாகி இருக்குமே, இந்த அதிகப்படியான பால் எங்கே போனது. எத்தனை நாட்களாக மக்கள் இதுபோல ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று ஒரு முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். குறைவாக பாலை வழங்க காரணமான அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: