மணலி மண்டலம் 21வது வார்டில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 21வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் உள்ளது. மணலி நகராட்சியாக இருந்தபோது இந்த சமுதாயக் கூடத்தை அப்பகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்கள் தங்களில் இல்ல திருமணம், நிச்சயதார்த்தம், காதணி விழா மற்றும் பணி நிறைவு விழா போன்ற நிகழ்ச்சிகளை குறைந்த செலவில் நடத்துவதற்கு பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், மாநகராட்சியாக இப்பகுதி தரம் உயர்ந்த பிறகு இந்த சமுதாயக் கூடம் மணலி மண்டல அலுவலகமாக செயல்பட்டது. பின்னர் இங்கிருந்து மண்டல அலுவலகம் இடமாற்றம் செய்யபட்டது. ஆனால், இந்த சமுதாயக்கூடம் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்ததால், மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் மூடப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் சிதிலமடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது. எனவே, இந்த கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய சமுதாயக் கூடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை மணலி மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே கடந்த மாதம் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், வார்டு கவுன்சிலர் முல்லை ராஜேஷ் சேகர், மேற்கண்ட பகுதி மக்கள் சமுதாயக் கூடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே, பழைய சமுதாயக்கூடத்தை இடித்து விட்டு இங்கு புதிதாக சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என்று மாநகர மேயருக்கு கோரிக்கை விடுத்தார். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மேயரும் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய சமுதாய கூடம் கட்ட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: