ஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி: அக்டோபர் 31 வரை செல்லலாம்

கூடலூர்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான, இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட மேற்கு எல்லையான கம்பம்மெட்டு வழியே 66 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இடுக்கி நகரம். இங்குள்ள சிறுதோணி என்ற இடத்தில், ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் 2ம் இடத்திலுள்ள, இடுக்கி ஆர்ச்டேம் உள்ளது. கேரள மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையை ஓணம் பண்டிகையை முன்னிட்டு பார்வையிட நேற்று முதல் அக்டோபர் 31 வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இடுக்கி ஆர்ச் அணையையும், வைஷாலி குகையையும் பார்த்துவிட்டு, 6 கிலோமீட்டர் நடந்து வர வேண்டும். அணைக்கு மேல் நடந்து செல்ல சிரமப்படுபவர்களுக்கு பேட்டரி கார் உள்ளது. இதில் பயணிக்க 8 பேருக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு ரூ.40, குழந்தைகளுக்கு ரூ.20 என நுழைவுகட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப்பயணிகள் இடுக்கி அணையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். வாரந்தோறும் அணையின் நீர்மட்டம் மற்றும் தொழில்நுட்ப சோதனைகள் நடக்கும் புதன்கிழமை மட்டும் பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை.

Related Stories: