மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் 22 மரங்களை வெட்ட அனுமதி: மாநகராட்சி தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் 22 மரங்களை வெட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. சென்னை மாநகரின் போக்குவரத்து  நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம்  செய்யப்பட்டது. அதன்படி 2015ம் ஆண்டு ஆலந்துார் முதல் கோயம்பேடு வரை  முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது. பின்னர், படிப்படியாக விமான நிலையம் வரை  சேவை நீட்டிக்கப்பட்டது. அதே போல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்  வரையிலும், செயின்ட் தாமஸ் மவுன்ட் வரையிலும் இரு மார்க்கத்திலும், மெட்ரோ  சேவை நீட்டிக்கப்பட்டது.

தற்போது, சென்னை விமான  நிலையம் - விம்கோ நகர். பரங்கிமலை - சென்ட்ரல் இடையே இயக்கப்படும் மெட்ரோ  ரயில்களில் தினமும் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்  பயணிக்கின்றனர். இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையை, மாநகரின் அனைத்து  பகுதிகளிலும் விரிவுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி, சென்னையின் தெற்கு - வடக்கு பகுதிகளையும், கிழக்கு மற்றும் மேற்கு  பகுதிகளையும் இணைக்கும் வகையில், திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து  வருகின்றன.

அந்த வகையில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையே, 26.1  கி.மீ., மெட்ரோ பாதை, மாதவரம் - சிப்காட் இடையே, 45.8  கி.மீ., மெட்ரோ ரயில் பாதை மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே, 47 கி.மீ., மெட்ரோ பாதை  அமைக்கப்படுகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மயிலாப்பூரில் உள்ள லஸ் சர்ச் சாலையில் 22 மரங்களை வெட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கவுன்சில் இதற்கான அனுமதியை நேற்று முன்தினம் வழங்கியது. மேலும் இத்திட்டத்திற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மயிலாப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 500 சதுர மீட்டர் நிலத்தை வழங்கியுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட நிலம் மற்றும் மரங்களுக்கான இழப்பீட்டு தொகை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடங்கியதும் லஸ் சர்ச் சாலையில் உள்ள பட்டா எண் 1654/37 மற்றும் 1654/38ல் இருக்கும் 11 மரங்களும், சர்வே எண் 1654/6 மற்றும் 41ல் உள்ள 11 மரங்களும் என மொத்தம் 22 மரங்கள் வெட்டப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னை மாநகராட்சி இத்திட்டத்திற்காக மாதாவரம், மயிலாப்பூர் மற்றும் ஆற்காட் ரோடு ஆகிய பகுதிகளில் ரூ.15 கோடி மதிப்பிலான நிலங்களை வழங்கியுள்ளது.

மேலும் லஸ் சர்ச் சாலையில் உள்ள தனியார் கடைகளும் இடிக்கப்படவுள்ளது. அவர்களுக்கும் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும். மாதவரத்தில் அசிசி நகர் ரயில் நிலையமும், மயிலாப்பூரில் திருமயிலை ரயில் நிலையமும் அமைக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தால் மாதவரத்தில் பாதிக்கப்பட்ட 16 கிணறுகளுக்கும் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல் பனகல் பூங்காவில் மெட்ரோ ரயில்நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தி 87 மரங்கள் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Related Stories: