வாட்ஸ் அப் குழு அமைத்து கள்ளக்குறிச்சியில் கலவரத்தை உருவாக்கிய 3 பேர் கைது: மேலும் பலருக்கு போலீஸ் வலை

சென்னை: வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து வதந்தியை பரப்பி கலவரத்தை உருவாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் சக்தி மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கலவரம் நடந்தது.  இந்த வழக்கினை புலனாய்வு செய்ய டிஐஜி பிரவீன்குமார் அபினபு தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்படையினர் நடத்திய விசாரணையில் மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி கலவரம் செய்ய தூண்டியது தெரியவந்தது. சிலர் வாட்ஸ் குழுக்களை அமைத்து அதில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்து மேற்படி குழுவில் கலவரம் செய்ய தூண்டும் வகையில் தகவல்கள், கருத்துக்களை பதிவு செய்ய ஏதுவாக இருந்தது தெரியவந்தது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள சேப்பாக்கம் நடுத்தெருவைச் சேர்ந்த விஜய் (28), கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மட்டப்பாளை துருவூரைச் சேர்ந்த துரைப்பாண்டி (20) ஆகியோர் வாட்ஸ் அப் குழுக்களை ஏற்படுத்தி அதில் நூற்றுக்கணக்கானவர்களை சேர்த்து, தவறான தகவல்களை பரப்பியது தெரியவந்தது. இதனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அதோடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் எரஞ்சி காச்சக்குடியைச் சேர்ந்த அய்யனார் (18) என்பவர் வாட்ஸ் அப் குழுவில் வன்மத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்ததோடு, கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பு புலனாய்வுக்குழுவினர் இதுவரை கலவரம், பொதுச் சொத்துக்கு சேதப்படுத்தியது தொடர்பாக 13 பேரையும், வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து கலவரத்தை தூண்டியதாக 16 பேரையும் கைது செய்துள்ளனர்.

Related Stories: