கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 177 செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ.433 கோடி இழப்பீடு வசூலிக்க பரிந்துரை: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிபுணர்கள் குழு அறிக்கை தாக்கல்

சென்னை: கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமாக செயல்பட்ட 177 செங்கல் சூளை உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடாக ரூ.433 கோடி வசூலிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல பெஞ்சுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. கோவை தடாகம் பகுதியில் செயல்பட்ட சட்டவிரோத செங்கல் சூளைகள் அளவுக்கு அதிகமாக மண்ணை தோண்டி எடுப்பது தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல பெஞ்ச் தானாக முன் வந்து விசாரித்து வருகிறது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்பேரில், பாதிக்கப்பட்ட வீரபாண்டி, சின்ன தடாகம், சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஆகிய ஐந்து கிராம பஞ்சாயத்துகளில் கோவை கலெக்டர் தலைமையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்ட நிபுணர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக அந்த நிபுணர் குழு பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாதிக்கப்பட்ட 5 கிராம பஞ்சாயத்துகளில், விஏஓக்களால் அடையாளம் காணப்பட்ட 565 வயல்களில், ‘டிஃபரன்ஷியல் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்’ (டிஜிபிஎஸ்) மூலம் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வில், மொத்தம் 1.10 கோடி கியூபிக் மீட்டர் (சிபிஎம்) மண் சட்டவிரோதமாக வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.373.74 கோடி வசூலிக்க வேண்டும். மேலும், செங்கல் சூளை உரிமையாளர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு,ரூ.59.32 கோடி இழப்பீடு வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் கடந்த 2000 முதல் 2020 வரை ஓடைகள், வாய்க்கால், ஆற்றங்கரை அமைப்பு, தொட்டிகள் மற்றும் அணுக முடியாத புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்கள் ஆகியவற்றில் தோண்டியெடுக்கப்பட்ட மொத்த பொருட்களின் அளவை மதிப்பிடுவதற்கு ரிமோட் சென்சிங் சர்வே, டிஜிபிஎஸ் மூலம் ஆய்வு செய்து  சரியான இழப்பீடு தொகையை கணக்கிட்டு செங்கல் சூளை உரிமையாளர்களிடம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: