ஜோதி நகரில் உள்ள ஏரியில் செத்துமிதந்த மீன்களை அகற்றி கிருமி நாசினி தெளிப்பு; திருத்தணி நகராட்சி நடவடிக்கை

திருத்தணி: திருத்தணி ஜோதி நகரில் உள்ள ஏரியில் செத்து மிதந்த மீன்களை அகற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி வார்டு எண் 15ல் அடங்கிய ஜோதி நகரில் உள்ள ஏரி ஒன்றிய பராமரிப்பில் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து கால்வாய், பாசன கால்வாய் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டதால் தண்ணீர் செல்வது தடைப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் ஏரி நிரம்பும்போது உபரிநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்பதால் ஏரி தண்ணீர் மாசுபட்டுவிட்டது.

இதன்காரணமாக ஏரியில் உள்ள கெண்டை, விரால் ஆகிய மீன்கள் நேற்று ஏரியில் ஆங்காங்கே செத்து மிதந்தது. மேலும் ஏராளமான மீன்கள் தொடர்ந்து இறந்துவருகிறது. மீன்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் ஜோதிநகர் உள்ளிட்ட பல்வேறு பகு பகுதி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மீன்வள துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்களை கொல்வதற்காக ஏரியில் யாராவது விஷம் கலந்தார்களா, நோய்கள் தாக்கி மீன்கள் இருந்தனவா, சூடு தாங்காமல் இருந்ததா என்ற கோணங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இந்த நிலையில், திருத்தணி  நகரமன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, நகராட்சி ஆணையர் ராமஜெயம், நகரமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி, ஆறுமுகம் ஆகியோர்  ஏரியில் ஆய்வு செய்தனர். பின்னர் இறந்துபோன மீன்களை அப்புறப்படுத்தி, கிருமி நாசினி தெளித்தனர். அருகில் உள்ள ஜோதி நகர் உள்பட பல பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தினர்.

Related Stories: