போரூர் ராமநாதஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது வாடகை செலுத்தாத 50 கடைகளுக்கு சீல்: அறநிலையத்துறை அதிரடி

பூந்தமல்லி: போரூரில் போரூர் ராமநாதஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 50 கடைகளுக்கு வாடகை செலுத்தாததால், அறநிலையத்துறை அதிகாரிகள் சீல்  வைத்தனர். போரூர் ராமநாதஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக 373 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதனை குடியிருப்புகளுக்கும், வணிக பயன்பாட்டிற்கும் வாடகைக்கும் கோயில் நிர்வாகம் விட்டிருந்தது. இதில், குன்றத்தூர் சாலையில் வணிக பயன்பாட்டுக்காக 5.5 கிரவுண்ட் மனையினை 4 நபர்கள் பெற்று அதனை கடைகளாக கட்டி 40  பேருக்கு உள்வாடகைக்கு விட்டுள்ளனர்.

தற்போது இதன் மதிப்பு ரூ.13 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் 4 பேரும் பல ஆண்டுகளாக அறநிலையத்துறைக்கு உரிய வாடகை செலுத்தாமல் அதிக அளவு வாடகை பாக்கி வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடைகளுக்கு சீல் வைத்து மீட்கும் பணி நேற்று நடைபெற்றது.  

இந்நிலையில் காவல்துறை உதவியுடன், வருவாய்துறையினர் முன்னிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைக்க வந்ததற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் கடைகளை மூடி சீல் வைத்ததைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அறநிலையத்துறையினர் தொடர்ந்து சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வியாபாரிகள் 100க்கும் மேற்பட்டோர் போரூர் குன்றத்தூர் சாலையில் அமர்ந்தும், படுத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். கட்டிட உரிமையாளர்களிடம் வாடகையை சரியான நேரத்தில் கொடுத்து விடுகிறோம். வியாபாரிகளுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் திடீரென அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசாருடன் வந்து மிரட்டி சீல் வைத்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்று அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.

வியாபாரிகள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா வந்து வியாபாரிகளுடன் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,  ‘‘கைது செய்யப்பட்ட வியாபாரிகளை எந்த வழக்கும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம், குடியிருப்பு வாசிகள் தான் கடைகளை கட்டி கொடுக்கிறார்கள்.  வியாபாரிகள் வாடகை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக திங்கட்கிழமை அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் ஆணையரை சந்தித்து முறையிட உள்ளோம். இது போன்ற பிரச்சனை தமிழகம் முழுவதும் உள்ளது. அரசு ஒத்து கொள்ளவில்லை என்றால் வணிகர்களை பாதுகாக்க போராட்டம் நடத்துவதற்கும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக உள்ளது,’’ என்றார்.

Related Stories: