இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்: திருநம்பியுடன் செல்ல மனைவிக்கு ஐகோர்ட் அனுமதி

மதுரை: இன்ஸ்டாகிராம் காதல் மனைவியை ஆஜர்படுத்தக் ேகாரி திருநம்பி தொடர்ந்த வழக்கில், அந்தப் பெண் மேஜர் என்பதால் விருப்பப்படி திருநம்பியுடன் செல்ல அனுமதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திருநம்பி ஒருவரும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும்  இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. கடந்த 7ம் தேதி இருவரும் திருமணம் செய்துள்ளனர். இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்திய நிலையில், தகவலறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து திருநம்பி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், இருதரப்பினரும் சமரசத் தீர்வு மையம் மூலம் முடிவு எட்டுமாறு அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. ஆட்ெகாணர்வு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் முன்பு மனுதாரர், அந்தப்பெண், அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

நீதிபதிகள் அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்,  தான் காதலித்து அவரை திருமணம் செய்துள்ளதாகவும், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், பெற்றோருடன் செல்ல விருப்பம் இல்லை என்றும் கூறினார். இதையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 21 வயதாகிறது. அவர் விரும்பியபடி மனுதாரருடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Related Stories: