எல்கேஜி மாணவியை வேன் ஏற்றி கொன்ற டிரைவருக்கு 6 மாதம் சிறை: காட்பாடி கோர்ட் தீர்ப்பு

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அருகே 9 வருடத்திற்கு முன்பு வேன் டயரில் சிக்கி எல்கேஜி மாணவி பலியான வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து காட்பாடி கோர்ட் தீர்ப்பு அளித்தது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த ஐதர்புரம் பகுதியை சேர்ந்தவர் தசரதன். இவரது மகள் தர்ஷினி(4). இவர் பள்ளிகொண்டாவில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். கடந்த 13-2-2013ம் ஆண்டு மாலை வழக்கம்போல் பள்ளி வேனில் மாணவி தரிஷினி வீடு திரும்பி கொண்டிருந்தார். வேனை சீனிவாசன்(28) என்பவர் ஓட்டி வந்தார்.

அவருடன் அதேபகுதியை சேர்ந்த கிளீனர் சிலம்பசரன் என்பவர் பணியில் இருந்தார். பசுமாத்தூர் அருகே பள்ளி வேன் நின்றபோது, மாணவி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதை கவனிக்காத டிரைவர் சீனிவாசன் வேனை இயக்கியதாக தெரிகிறது. இதில், மாணவி தர்ஷினி வேன் டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு காட்பாடி கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெய்கணேஷ் குற்றம் சாட்டப்பட்ட டிரைவர் சீனிவாசனுக்கு 6 மாதம் சிறை தண்டனை‌ விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் நேற்று முன்தினம் இரவு  அடைத்தனர். கிளீனர் சிலம்பரசன் இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: