செஸ் தொடக்க விழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு காவலர்களை வீட்டிற்கு அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு: தேநீர் விருந்துடன் புகைப்படமும் எடுத்தார்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு சிறப்பாக பாதுகாப்பு வழங்கிய காவலர்களை தனது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு தேநீர் விருந்து வைத்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று முன்தினம் சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் 186 நாடுகளில் இருந்து செஸ் வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டியை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து இருந்தது.

பிரதமர் மற்றும் சர்வதேச வீரர்கள் தொடக்க விழாவில் கலந்துகொண்டதால் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற நேரு உள் விளையாட்டு அரங்கில் எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்காக தனித்தனி இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், மிக முக்கிய பிரமுகர்களை அரங்கில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளுக்கே  அழைத்து சென்று அமர வைப்பதற்காக தனியாக போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர்.  

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் மிக முக்கிய பிரமுகர் என்பதால் அவருக்கு நுங்கம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் குணசேகரன், மருது, கிருஷ்ணகுமார், தலைமை காவலர் அலாவுதீன், முதல் நிலை காவலர்கள் ராஜ்குமார், தங்கபாண்டி என 6 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் விழாவிற்கு வந்த நடிகர் ரஜிகாந்தை விழா அரங்கத்திற்குள் மிகவும் பாதுகாப்புடனும் கனிவுடனும் போலீசார் அழைத்து சென்று இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்த பிறகு, மீண்டும் அரங்கில் இருந்து நடிகர் ரஜினிகாந்தை அழைத்து சென்று பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர்.

 இது நடிகர் ரஜினிகாந்தை மிகவும் நெகிழ்ச்சியடைய செய்தது. பிறகு நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன்னை பத்திரமாக பாதுகாப்பு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து அனுப்பி வைத்த எஸ்ஐ உள்பட 6 காவலர்களை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும், அவர்களிடம் தங்களில் பாதுகாப்பு தன்னை மிகவும் நெகிழ செய்ததாக கூறி தேநீர் விருந்து அளித்து காவலர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: