மேட்டுப்பாளையம் அருகே மீண்டும் ஊருக்குள் புகுந்தது கோயில் விழா சீரியல் செட் மீது மோதாமல் குனிந்து சென்ற பாகுபலி யானை: பக்தர்கள், பொதுமக்கள் ஆச்சரியம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் விழாவுக்கு போடப்பட்டிருந்த சீரியல் செட் மீது மோதி சேதப்படுத்தாமல் பாகுபலி காட்டுயானை குனிந்த சென்ற காட்சி பக்தர்கள், மற்றும் பொதுமக்களை ஆர்ச்சரியத்தில் ஆழ்த்தியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சமயபுரம், ஓடந்துறை, குரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானை பாகுபலி அவ்வப்போது வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது.

இதனால் கோயிலில் அலங்காரத்திற்காக சீரியல் லைட்டுகள் போடப்பட்டு ஜொலித்தன. கோயில் வளாகத்திற்கு வந்த பாகுபலி யானை சீரியல் செட் மீது மோதி சேதப்படுத்தாமல் குனிந்து சென்றது. இதனை பார்த்த மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். கடந்த ஒரு மாத காலமாக வராமல் இருந்த யானை நேற்று முன்தினம் மீண்டும் குடியிருப்புகள் நிறைந்த சமயபுரம் பகுதிக்கு வந்தது. கல்லார் வனப்பகுதியில் இருந்து நெல்லிமலை வனப்பகுதிக்குள் செல்ல சமயபுரம் குடியிருப்பு சாலையில் புகுந்து பின்னர் நெல்லிமலைக்கு சென்றது.

Related Stories: