புழுதிவாக்கத்தில் பரபரப்பு திமுக கவுன்சிலர் தம்பியை கார் ஏற்றி கொல்ல முயற்சி: போலீசார் விசாரணை

ஆலந்தூர்: புழுதிவாக்கம் ஜேக்கப் தெருவை  சேர்ந்தவர் ஜெ.கே.மணிகண்டன். 186வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவரது சகோதரர் பர்மன் (42), முன்னாள் நகராட்சி கவுன்சிலர். இவரது வீட்டிற்கு பக்கத்தில் வேலாயுதம் என்பவர் வசிக்கிறார். இவரது மனைவி ஹேமலதா. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே  குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு வந்த துரைப்பாக்கம், கண்ணகிநகரை சேர்ந்த ஹேமாவதியின் உறவினர்கள்  குடிபோதையில் வேலாயுதத்திடம் ரகளை செய்துள்ளனர்.

இந்த சத்தத்தை கேட்டு வெளியே வந்த பர்மன், ஹேமாவதியின் உறவினர்களிடம் ‘‘இரவு நோத்தில் வந்து இப்படி கூச்சல் போடுகிறீர்களே, இது நியாயமா’’ என்று கேட்டுள்ளார். அப்போது, போதையில் இருந்தவர்கள் பர்மனிடம், ‘‘நீ யார் எனக் கேட்டு, தகராறில் ஈடுபட்டனர். இதனால், அவர்களிடையே  கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை பர்மன்  தனது பைக்கில் வீட்டில் இருந்து புறப்பட்டபோது, பின் தொடர்ந்து வந்த கார் ஒன்று பைக் மீது மோதுவது போல் சென்றது. அவர், சுதாரித்து சென்றபோது, மீண்டும் வேகமாக வந்த அதே கார், மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் அருகே பர்மன் ஓட்டி சென்ற பைக் மீது  மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட பர்மன், காயங்களுடன் உயிர் தப்பினார். நேற்று முன்தினம் தன்னுடன் தகராறில் ஈடுபட்ட ஹேமாவதியின் உறவினர்கள்தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்ககூடும் என சந்தேகமடைந்த பர்மன் இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்குபதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: