ஆடி அமாவாசையையொட்டி உப்புத்துறை மலைப்பாதை வழியாக சதுரகிரி செல்ல வனத்துறை அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

விருதுநகர்: ஆடி அமாவாசையை தினத்தை முன்னிட்டு சதுரகிரி உப்புத்துறை மலைப்பாதை வழியாக செல்ல 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சித்தர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் சதுரகிரியில் உள்ள மகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா பிரசித்திபெற்றதாகும். கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில் இன்று நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி கோவிலுக்கு நேற்று முன்தினம் முதல் நாளை வரை பக்தர்கள் சென்று வழிபட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தாணிப்பாறை, சாத்தூர் மலைப்பாதைகள் வழியாக நேற்று முன்தினம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், உப்புத்துறை மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே சதுரகிரியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் அங்குள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, கருப்பசாமி கோவில் ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோவிலில் இருந்து பக்தர்கள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு மலை பகுதியிலேயே தங்கவைக்கப்பட்டனர். கீழே இறங்கிய பக்தர்களை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக அடிவார பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: