அதிமுக ஆர்ப்பாட்ட மேடையில் எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம்

சென்னை: வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிமுக தொண்டர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி அதிமுக சார்பில் சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று (27ம் தேதி) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொன்னையன், கோகுல இந்திரா, சென்னை மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்தில் நேற்று காலை 11 மணிக்கு பேச தொடங்கி, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆவேசமாக பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவரால் பேச முடியவில்லை. அப்படியே கண்ணை மூடிக் கொண்டு நின்றார். அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அப்போது, அருகில் இருந்த அதிமுக நிர்வாகிகள் சுதாரித்துக் கொண்டு அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்தனர். அவரது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு, கைக்குட்டையால் அவரது முகத்தில் காற்று வரும்படி வீசினர். இதையடுத்து 5 நிமிடத்தில் எடப்பாடி, சகஜ நிலைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு எடப்பாடியை நிர்வாகிகள் அழைத்து சென்றனர்.

இதேபோன்று அதிமுக முன்னாள் எம்பி எஸ்.ஆர்.விஜயகுமாரும் மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ள நேஷனல் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் மட்டும் ஒரு போலீஸ்காரர், தொண்டர்கள் உள்பட 5 பேர் மயக்கம் போட்டு விழுந்தனர். இதற்கு அதிக வெயில் ஒரு காரணம் என்று கூறப்பட்டாலும், 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் என்று கூறி விட்டு 11 மணிக்கு தான் எடப்பாடி பழனிசாமிக்கு மேடைக்கு வந்ததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

‘துரோகிகளை விரட்டியடிப்போம்’

ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தமிழக அரசு உடனே சொத்துவரியை குறைக்க வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இந்த வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிப்பில் இருந்து மக்கள் மீளவேண்டும் என்றால் இந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். மின் கட்டணத்தை திரும்பபெற வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் வாழும் கோயிலாக இருக்கின்ற எம்ஜிஆர் மாளிகையில் அத்துமீறி நுழைந்து, காலால் எட்டி உதைத்து, கதவுகளை உடைத்து, பொருட்களை சேதப்படுத்திய சதிகாரர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். துரோகிகளுக்கு  தகுந்த பாடத்தை கற்பிப்போம். துரோகிகளை ஓட ஓட விரட்டி  அடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: