அதிமுக ஆர்ப்பாட்டத்தால் ராஜாஜி சாலையில் 5 மணிநேரம் போக்குவரத்து கடும் பாதிப்பு: பொதுமக்கள் அதிருப்தி

சென்னை: வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால், ராஜாஜி சாலையில் 5 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து, அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களில் கடந்த 25ம் தேதியும், சென்னையில் மட்டும் 27ம் தேதி (நேற்று) காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் அறிவித்து இருந்தார். அதன்படி, சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் சென்னை பகுதியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், ஆதிராஜாராம், பாலகங்கா, விருகை ரவி, வெங்கடேஷ்பாபு, ராஜேஷ், தி.நகர் சத்யா உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கான தொண்டர்களை அந்த பகுதிக்கு அழைத்து வந்திருந்தனர். இதன் காரணமாக, சென்னை, துறைமுகம் பகுதியான ராஜாஜி சாலையில் காலை 9 மணியில் இருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பாரிமுனை, சென்ட்ரல், துறைமுகம் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கார்கள் வேறு பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த போக்குவரத்து சீராக 5 மணி நேரம் ஆனதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

Related Stories: